திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் குடும்பத்துடன் சாமி தரிசனம்! - அமைச்சர் சுவாமிநாதன் செய்திகள்
மயிலாடுதுறை:உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்காரம் செய்ததால் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தனது குடும்பத்துடன் வந்து சாமிதரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர் சுவாமிநாதன் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். பின்னர் கள்ளவர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்பாள் சந்நிதிகளுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இதையும் படிங்க:காழ்ப்புணர்ச்சியினால் சிலர் சனாதனத்தைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி