நீலகிரியில் புதுப்பொலிவுடன் வளம் மீட்பு பூங்கா.. அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்! - etv bharart tamil
நீலகிரி மாவட்டம்கேத்தி பேரூராட்சியில் சிறப்பு மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக் கடை, பொது கழிப்பிடம், சாலை பலப்படுத்துதல், சாலையில் வடிகால் அமைத்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், நீர் தேக்கத் தொட்டி அமைத்தல் என மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக கேத்தி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை அமைச்சர் திறந்து வைத்தார். இப்பூங்காவில் தூக்கி வீசப்பட்ட ரப்பர், டயர், கழிப்பிட பீங்கான்கள், கிரைண்டர், தலைக்கவசங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாவல், விக்கி, கொய்யா உள்ளிட்ட பலவகை மரங்கள் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து சோலூர் பேரூராட்சியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர், நடைபாதை என பல்வேறு நலத்திட்டங்களையும் திறந்து வைத்தார். இயற்கை மிகுந்த சூழலில் உருவாக்கப்பட்டுள்ள கேத்தி பகுதியில் செயல்படும் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் வளம் மீட்பு பூங்கா பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.