பொள்ளாச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு! - Krantikumar Padi
கோவை: பொள்ளாச்சி-கோவை சாலை சேரன் நகர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, ஆய்வகம், மருந்தகம் ஆகியப் பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு சால்வை அணிவித்தும் நலம் விசாரித்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியிடம் அன்பாகப் பேசி விரைவில் சிகிச்சை அளித்து அனுப்பவேண்டும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இ.எஸ்.ஐ மருத்துவமனைகளும் தொழிலாளர்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவமனைகளில் போதிய அளவிற்கு மருந்துகள் இருப்பதாகவும், மருந்துகள் வாங்குவதற்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி பார்த்த அமைச்சர், புதர்மண்டி மது பாட்டில்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.