மத்திய பாதுகாப்புப்படை மீது நம்பிக்கை இல்லை: மெய்தேய் பெண்கள் போராட்டம்! - போராட்டம்
தவ்பால்:மணிப்பூர் மாநிலம், தவ்பால் மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி மெய்தேய் இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குக்கி மற்றும் மெய்தேய் இன மக்கள் இடையே கடந்த மே மாதம் முதல் பெரும் போராட்டங்களும், கலவரமும் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில்தான் அங்கு இணைய சேவை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த இடைப்பட்ட நாட்களில் அங்கு நடைபெற்ற கலவரங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. பின், மத்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் நிலை ஏற்படும் என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மத்திய, மாநில அரசுகளில் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மெய்தேய் இனப்பெண்கள், ராணுவத்தின் நடவடிக்கையால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் வழியே நியாயம் கிடைக்கட்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இங்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எனவும், குக்கி போராளிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மெய்தேய் மக்களை ராணுவம் கடுமையாக தாக்குகிறது எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தங்களுக்கு மத்தியப் பாதுகாப்புப்படை மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உலகிலுள்ள புலிகளில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன - ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!