தேனி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டு போன மீனாட்சி அம்மன் கண்மாய்: வேதனையில் விவசாயிகள்!
Published : Aug 22, 2023, 5:12 PM IST
தேனி:ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள மீனாட்சி அம்மன் கண்மாய் பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரின் அருகிலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது மீனாட்சியம்மன் கண்மாய். சுமார் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த மிகப்பெரிய கண்மாய் மீனாட்சிபுரம் அருகே அமைந்திருக்கிறது.
தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் மீன்கள் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு இந்த கண்மாயிலிருந்து சுமார் 750 கிலோ முதல் 1 டன் வரை கெண்டை, கெளுத்தி, கட்லா ரோகு போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் இந்த கண்மாயைச் சுற்றிலும் அயல்நாட்டு பறவைகளான பெலிக்கன், கரண்டி மூக்கன், கொக்கு, சென்நாரை, கருநாரை, மீன் கொத்தி பறவைகள், நீர்காகம் போன்ற பல்வேறு பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களின் முக்கிய நீர் பாசனத்திற்காக இந்த கண்மாய் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்மாய் நீரை சார்ந்து இப்பகுதியில் நெல், சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மழை பொய்த்து விட்டதால் மழை இன்றி கண்மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.
மேலும் கோடை காலம் முடிந்தும் இன்னும் வெப்பமான சூழ்நிலை உள்ளதாலும் வீசும் வெப்பக் காற்று காரணமாக கண்மாய் நீர் முற்றிலும் வற்றி கண்மாய் மொத்தமாக வறண்டு ஆடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
சுமார் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு சிறு குட்டையாக காட்சியளித்து வருகிறது. ஆறடி ஆழத்திற்கு மேல் நீர் வற்றியதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக இந்த கண்மாய் நீர் வற்றி விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.