World Hunger Day: மயிலாடுதுறையில் 1000 பேருக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்! - Vijay
மயிலாடுதுறை:உலக பட்டினி தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதன் இயக்க நிர்வாகிகளுக்குக் கடிதம் வாயிலாக அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் ஏழை மக்கள் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் இயக்க நிர்வாகிகள் உணவு தயாரித்தனர். இதன்படி, வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம் ஆகியவை முக்கிய உணவாக தயார் செய்யப்பட்டது. பின்னர், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் இயக்க நிர்வாகிகள் வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், தயிர் பச்சடி, ஊறுகாய் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை 500 பேருக்கு வழங்கினர்.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு, குத்தாலம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் செம்பனார்கோவில் மற்றும் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.