கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயிலில் ஆயிரம் பசுக்களுக்கு கோ பூஜை! - etv bharat tamil
Published : Jan 16, 2024, 5:38 PM IST
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் வடநாட்டின் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் கோயிலை விட மிகப்பெரிய அளவில் பாண்டுரங்கனுக்கு கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனுடன் அமையப் பெற்ற கோசாலையில் கோவர்த்தனகிரி பகுதியிலுள்ள கிருஷ்ண வம்சத்தைச் சேர்ந்த பசுக்கள் உள்பட இந்திய நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு இன பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவை எந்தவித லாப நோக்கமும் இன்றி இங்கு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜன.16) மாட்டுப் பொங்கலையொட்டி, உலக மக்கள் நன்மைக்காக கோயில் கோசாலையில் இருக்கும் ஆயிரத்து இருநூறு பசுக்களுக்கு, ஏராளமான தம்பதியினர் ஒரே நேரத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைத்து, வேத பண்டிதர் மந்திரங்கள் கூற, அதனை திரும்பக் கூறி, உதிரி மலர்களாலும், மஞ்சள் தடவிய அட்சதைகளாலும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்தும், தீபங்கள் காட்டியும் வழிபட்டு, பசுக்களுக்கு வாழைப்பழங்களையும், செங்கரும்புகளையும் உணவாக அளித்து மகிழ்ந்தனர். பசுக்களை வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களும் கிட்டும் என்பதும், பூஜை செய்பவர்களுக்கு மட்டுமின்றி, இதனை காண்பவர்களுக்கும் அந்த நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகம்.