சென்னையில் கடத்தப்பட்ட ராப் பாடகர்.. 10 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்.. நடந்தது என்ன? - கடத்தப்பட்ட பிரபலம் 10 மணி நேரத்தில் மீட்பு
புதுக்கோட்டை:பிரபல ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த், மதுரையில் வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பி வரும்போது சென்னை அடுத்த வேலப்பன்சாவடி அருகே மர்ம நபர்களால் கத்தி முனையில் தேவ் ஆனந்த்தை மிரட்டிக் கடத்தப்பட்டுள்ளார்.
தகவலறிந்த தேவ ஆனந்த்தின் நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். சோதனை நடத்தியதில், அந்த வாகனத்தில் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டது தெரிய வந்ததுள்ளது.
உடனடியாக அவரை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர், முகத்துப்பாண்டி, முத்து, சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுவாமிநாதன் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் தேவ் ஆனந்த்தின் சகோதரர் சிரஞ்சீவி தொழில் நிமித்தமாக இரண்டு பேரிடம் 2.5 கோடி ரூபாய்க் கடன் வாங்கியுள்ளதாகவும், தொகையைத் திருப்பி செலுத்தாத காரணத்தினால் சகோதரர் சிரஞ்சீவிக்குப் பதிலாகா தேவ் ஆனந்த் கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கடத்தல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.