ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் கும்பாபிஷேகம்; மதுரை கள்ளழகருக்கு அழைப்பு..! - madurai news
Published : Dec 29, 2023, 2:54 PM IST
மதுரை: உலகப் புகழ் பெற்ற ஒடிசா மாநிலம், ஜெகன்நாத் பூரி, ஸ்ரீ ஜெகன்நாதர் கோயிலில் பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வு ’ஸ்ரீமந்திர பரிகிராம பிரகல்பா’ என அழைக்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஒடிசாவில் இருந்து குழுவினர் வந்து தமிழ்நாட்டின் தலைசிறந்த கோயில்களுக்கு நேரடியாக சென்று கோயில் தெய்வங்களுக்கு அழைப்பிதழை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் கோயிலில் இன்று ஜெகன்நாதர் கோயில் நிர்வாகத்தினரும், ஒடிசா அரசு பிரதிநிதியும் வந்திருந்து அழைப்பிதழைக் கள்ளழகர் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர் அழைப்பிதழைக் கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் மு.இராமசாமியிடம் வழங்கி விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜெகன்நாதர் கோயிலில் இருந்து வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விருந்தினர்களுக்குக் கள்ளழகர் கோயில் பிரசாதமான சம்பா தோசை மற்றும் நூபுரங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது.