தனியார் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைப் புலி - வீடியோ வைரல்! - கோவை
கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அண்மை காலமாக வனத்தை விட்டு வெளியேறும் காட்டுயானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே கேரளா செல்லும் வழியில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் ஒற்றை புலி சாலையை கடக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வனவிலங்குகளின் வாழ்விடம் தொடர்ந்து அழிக்கப்படுவதே வன விலங்குகள் ஊருக்குள வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. யானைகளின் வலசை பாதைகள் அழிக்கப்படுவதால் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகளவில் நடக்கின்றன.
மேலும் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் நீராதாரங்கள் வேகமாக வற்றி வருகின்றன. இதனால் வன விலங்குகள் நீர், உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. வனப்பகுதியை ஒட்டிச் செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மனிதர்களால் வன விலங்குகள் பாதிக்கப்படவும், வன விலங்குகளால் மனிதர்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.