மருதமலை முருகன் கோயிலில் சிறுத்தை நடமாட்டம்.. சிசிடிவி காட்சிகள் வெளியானது! - Leopard movement
Published : Oct 8, 2023, 11:37 AM IST
கோயம்புத்தூர்:கோயம்புத்தூர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் 7ஆம் படை வீடு என அழைக்கப்படுகிறது. மருதமலை முருகன் கோயிலுக்கு கோவை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோயிலில் லிப்ட் அமைப்பது, தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குச் செல்பவர்கள் படிப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் படிப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்குச் செல்லும் படிப்பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோயில் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.