CCTV Footage: குடியிருப்புக்குள் நுழைந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை! - நீலகிரி
நீலகிரி:குன்னூர் நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகளான காட்டெருமை, புலி, கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் நாய்கள் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் அங்கு வந்த சிறுத்தை, நாய் ஒன்றினை பிடித்து இழுத்துச் சென்றது. திடீரென்று அந்தப் பகுதியில் வந்த ஒரு வாகனத்தினால் நாயை கவ்வி இருந்த சிறுத்தை பிடியைத் தளர்த்தியது. இதனால் நாய் அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்த காட்சி அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஜெகதளா ஊர் பொதுமக்கள் வனத்துறைக்கு குடியிருப்பில் சுற்றித் தெரியும் சிறுத்தையை உடனடியாகக் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.