கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி.. சுற்றுலா பயணிகள் குஷி! - Kumbakkarai Falls open after 5 days
Published : Sep 7, 2023, 12:28 PM IST
தேனி: கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் ஐந்து நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வட்டக்காணல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க கடந்த இரண்டாம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வருகிற தண்ணீரின் அளவு சீரானதால், இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்து அறிவித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்ற நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில், கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.