1000 வருட பழமை வாய்ந்த அதியமான்கோட்டை பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பவித்திர
Published : Sep 4, 2023, 10:12 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு சென்றாயா பெருமாள் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் நடைபெற்றதாக வரலாற்று குறிப்பில் கூறப்படுகிறது. தற்போது இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா, மன்னர் காலத்திற்குப் பின் இன்று நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து முதற்கால யாகவேள்வி மற்றும் கணபதி, லட்சுமி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரண்டாம் கால யாகவேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்கத் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பவித்திர, தண்டத்தை ஊர்வலமாகக் கொண்டு வந்தார். பின்னர் மூலவர் விமான கோபுர கலசம், கருடாழ்வார் விமான கோபுர கலசம் மற்றும் கொடி மரம் உட்பட மூலவர் தெய்வங்களுக்கு அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டனர். பின்னர் பூஜையின் ஒரு நிகழ்வாகக் கலச நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கப்பட்டது.