குலசை தசரா திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வு கோலாகலம்!
Published : Oct 22, 2023, 8:25 AM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஸ்ரீ ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா, கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மேலும், பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று (அக்.21) இரவு, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி காளி வேடம், அம்மன் வேடம், ராஜா வேடம், ராணி வேடம், ஆஞ்சநேயர் வேடம், குறவன் வேடம், கிருஷ்ணர் வேடம், போலீஸ் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது வேண்டுதலுக்கு தகுந்தார் போல் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று வருவர்.
மேலும், தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 24ஆம் தேதி கோயில் கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹாரம் நாளில் பக்தர்கள் பல வேடங்கள் அணிந்து. தாங்கள் பெற்று வரும் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.