"கைகளை கால்களாக நினைத்து நன்றி சொல்கிறோம்" - மகளிர் உரிமை தொகைக்கு உதயநிதியிடம் நன்றி கூறிய பெண்கள்!
Published : Sep 25, 2023, 8:43 PM IST
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி வருகை தந்துள்ளார். அதில் ஒரு நிகழ்வாக ஒசூரை அடுத்த சூளகிரியில் அமைக்கப்பட்டு வரும் 3வது சிப்காட்டில் வருங்கால நகர்திறன் பூங்கா அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதியை திமுகவின் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் சாலையின் இருபுறங்களிலும் நின்ற பெண்கள், மகளிர் உரிமை தொகை வழங்கியதற்கு நன்றி என்கிற பதாகைகளை வைத்துக்கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திறந்தவெளி காரில் அமைச்சர் உதயநிதி வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் பெண்கள் மகளிர் உரிமை தொகை வழங்கியதற்காக உதயநிதி கைகளை பிடித்துக் கொண்டு கால்களாக நினைத்து நன்றி தெரிவிப்பதாகவும், கஷ்டப்பட்டு இத்திட்டத்தை கொடுத்த நீங்களும், உங்களது குடும்பமும் சந்தோஷமாக இருக்கனும் என வாழ்த்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீர விளையாட்டான எருது விடும் விழாவிற்கு அரசு சார்பில் ஜல்லிக்கட்டிற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கூறுவதால், கடந்த எருது விடும் விழாக்கள் 90% பாதிக்கப்பட்டதால் எருது விடும் விழாவிற்கான விதிமுறைகளை மாற்றி தருமாறு எருது விடும் கமிட்டியினர் கோரிக்கை அமைச்சர் உதயநிதியிடம் மனுவினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, எம்எல்ஏக்கள் பிரகாஷ், மதியழகன் மேயர் சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.