நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ராபின் டிராவல்ஸ்-க்கு 70 ஆயிரம் அபராதம்: கேரளா மோட்டார் வாகனத்துறை அதிரடி!
Published : Nov 19, 2023, 7:25 PM IST
கோயம்புத்தூர்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பேபி கிரீஸ். இவர் ராபின் டிராவல்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவரது டிராவல்ஸில் உள்ள பேருந்து ஒன்றுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்றுள்ளார். அதன் மூலம் பத்தினம்திட்டாவில் இருந்து கோவைக்குப் பேருந்து சேவையைத் துவங்கினார்.
கேரளா மோட்டார் வாகனத்துறை இதற்கு அனுமதி அளிக்க மறுத்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் முன்பதிவு செய்த பயணிகளை அழைத்து செல்லாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து சனிக்கிழமை காலை பத்தனம்திட்டாவிலிருந்து கோயம்புத்தூருக்குப் பேருந்து சேவையை ராபின் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கேரளா மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் ராபின் டிராவல்ஸ் பேருந்தை மறித்து, அபராதம் விதித்துள்ளனர். இதனிடையே இந்த பேருந்து இன்று(நவ.19) தமிழக எல்லைக்குள் வந்தது. கந்தேகவுண்டன் சாவடி பகுதியில் டிராவல்ஸ் பேருந்தை வழிமறித்த தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ராபின் டிராவல்ஸ் பேருந்துக்கு 70 ஆயிரத்து 410 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அகில இந்தியச் சுற்றுலா அனுமதி பெற்று டிராவல்ஸ் வாகனங்களை இரு மாநிலங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.