வேலூர் வந்த கருணாநிதியின் முத்தமிழ் பேனா ஊர்திக்கு உற்சாக வரவேற்பு! செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவர்கள்! - கருணாநிதி சிலை
Published : Dec 1, 2023, 10:38 PM IST
வேலூர்:முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் படைப்பாற்றலை எடுத்துரைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு வேலூரில் இன்று (டிச.1) மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பன்முக ஆற்றல், அவர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் செயல்படுத்திய மக்கள் நல திட்டங்களை தமிழகம் முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் முத்தமிழ் தேர் எனும் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி கடந்த நவம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பல்வேறு மாவட்டங்களை கடந்து வேலூர் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்த இந்த ஊர்திக்கு கோட்டை காந்தி சிலை அருகே மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் ,கார்த்திகேயன், அமலுவிஜயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள், ஊர்தியில் இருந்த கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அங்கு பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த அலங்கார ஊர்தியை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள், திமுக பிரமுகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர்தியில் இருந்த கருணாநிதி சிலை முன் நின்று சுயபடம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இந்த ஊர்தி புதிய பேருந்து நிலையம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகிலும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.