பேருந்தில் பாடல் ஒலியைக் குறைக்க சொன்ன நீதிபதி.. அடுத்து நடந்தது என்ன? - chengalpattu
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர், செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு தனியார் பேருந்தில் நேற்று காலை 10 மணியளவில் பயணம் செய்து உள்ளார். அவ்வாறு பேருந்தில் பயணித்தபோது அந்தப் பேருந்தில் சினிமா பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பியதைக் கவனித்த நீதிபதி, நடத்துநரிடம் சத்தத்தைக் குறைக்க கூறி அறிவுறுத்தி உள்ளார்.
இதை சற்றும் கண்டுகொள்ளாமல் நடத்துநர் தனது பணியை தொடர்ந்து உள்ளார். இதனால் மீண்டும் நடத்துநரிடம் ஒலியைக் குறைக்குமாறு நீதிபதி கூறி உள்ளார். நீதிபதியின் வேண்டுகோளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த நீதிபதி, காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் துறைக்கு இது குறித்த புகார் தெரிவித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி நீதிபதியின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், நடத்துநருக்கு போக்குவரத்து காவல் துறையினர் தகுந்த அறிவுரை அளிக்கும் விதமாக இது போன்று பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.