கனகதாசர் ஜெயந்தி விழா: தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்! - குரும்பர் இனமக்கள்
Published : Jan 1, 2024, 2:30 PM IST
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டையில் கவியரசர் ஸ்ரீகனகதாசரின் 536வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு குரும்பர் இனமக்கள் தங்களது குல தெய்வங்களுக்கு பாரம்பரிய கலாச்சார முறைப்படி தலைமேல் தேங்காய்களை உடைத்து விநோத நேர்த்திக்கடனை செலுத்தினர்.
குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனகஜோதி சேவா சமிதி சார்பில் கவியரசர் ஸ்ரீகனகதாசரின் 536வது ஜெயந்திவிழா கொண்டாட்டதையொட்டி, முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்கள் அனைத்தும் குரும்பர் இனமக்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படி டொல்லு குணிதா, வீரகாசை, வீரபத்ர குணிதா ஆகிய நடனங்களுடன் மேளதாளங்கள் முழங்க நகரின் வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீரபத்ரசுவாமி, ஸ்ரீசிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீதொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, சிக்கவீரம்மா தேவி, லிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட பல்வேறு குல தெய்வங்களை வரிசையாக வைத்து பூஜை ஆட்டம், வீரமக்கள் ஆட்டம் மற்றும் சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் குரும்பர் இனமக்கள் தலைமேல் தேங்காய்களை உடைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைமேல் தேங்காய்களை உடைத்து விநோத வழிபாட்டை மேற்கொண்டனர். இவ்விழாவில் தேன்கனிகோட்டை, ஓசூர், கெலமங்கலம், தளி, அஞ்செட்டி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.