சுட்டெரிக்கும் வெயிலுக்கு சணல் விரிப்பு.. தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பாடு!
தஞ்சை - உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு, பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், தஞ்சை மாநகரிலும் இயல்பான வெயிலை விட கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில், பக்தர்களின் வசதிக்காக சணலால் ஆன மிதியடி விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் கோயில் பணியாளர்களால் அடிக்கடி தண்ணீரும் ஊற்றப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெயிலின் தாக்கத்தை உணர்வதில் இருந்து வெளியேறி, கொளுத்தும் வெயிலிலும் இதமாக நடந்துசென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் மாநகரப் பகுதிகளில், அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் ஆகியோரது தலைமையில் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் மோர் ஆகிய குளிர்ச்சியான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.