மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஜப்பான் பக்தர்கள் ஹோமம் வளர்த்து சாமி தரிசனம் - மாயூரநாதர் கோயில்
மயிலாடுதுறை: ஜப்பான் நாட்டினர் தமிழ் மொழி மீதும் தமிழ்நாட்டின் மீதும் பெரும் பற்று கொண்டுள்ளனர். மேலும் இங்கு சாமி தரிசனம் செய்வதில் அவர்கள் மிகவும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். மேலும் ஜப்பான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நிகராக ஆன்மீக சுற்றுவாவிற்கும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் இருந்து தமிழ்நாடு வந்த நடிகை ஒருவர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதுபோல் தற்போது, சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 30 பேர் ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி என்கிற தகாயுகி ஹோஷி தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ திருக்கோயில்களில் சிவவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயிலில் அவர்கள் மூலமந்திர ஹோமம் நடத்தி, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில், புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, புனிதநீர் கொண்டு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஜப்பான் தொழிலதிபர் சுப்பிரமணியம், தருமபுரம் கல்லூரி செயலர் செல்வநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.