ஆதித்யா எல்1 கவுண்ட் டவுன் தொடக்கம்.. இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்! - Aditya L1 countdown begins ISRO chief Somanath
Published : Sep 1, 2023, 12:23 PM IST
சென்னை: சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளின் கவுண்ட் டவுன் இன்று (செப்டம்பர்1) தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது.
சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பவுள்ளது.
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,“ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தத் தயாராகி வருகிறோம். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாராக உள்ளன. இதற்கான ஒத்திகை ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆதித்யா எல்1 செயற்கைக்கோளுக்கான கவுண்ட் டவுன் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.” என்றார்.
மேலும், “சந்திரயான்-3 நன்றாக வேலை செய்கிறது. அனைத்து தரவுகளும் நன்றாக வருகின்றன. 14 நாட்கள் முடிவில் எங்கள் பணி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.