Senthil Balaji: சென்னையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டுக்கு சீல்! - chennai seithikal
சென்னை:சென்னை, கோவை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அரசியல் உதவியாளர் கோகுல் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 26ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், அபிராமபுரம் ஸ்ரீபதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளருமான கோகுல் என்பவரின் வீட்டை வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர். கோகுல் வீட்டில் இல்லாததால், தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் இரண்டு முறை கோகுலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு முறையும் உரிய விளக்கம் அளிக்காததால், வருமான வரித்துறையினர் (ஜூன் 14) வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
அந்த நோட்டீசில், தொடர்ச்சியாக கோகுலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும், முறையாக விளக்கம் அளிக்காததால் சீல் வைப்பதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்ட வீட்டிலுள்ள ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதியில்லாமல் தொடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 7ஆம் தேதிக்குள் கோகுல் உரிய ஆவணங்களை சமர்பித்து, எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்படி சமர்பிக்க தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராத தொகை செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வருமான வரித்துறையினர் விதித்த கால அவகாசம் முடிவடைந்தும் கோகுல் உரிய ஆவணங்களை வருமான வரி துறையினரிடம் சமர்ப்பிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கையில் வருமான வரி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.