"அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு.. முதலமைச்சர் செய்வாரா" - எச்.ராஜா கேள்வி!
வேலூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பு ஏற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் விஷாரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மது பானத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளதை சுட்டிக் காட்டினார். டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது எப்படி கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், அரசு டாஸ்மாக் கடைகளில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், இதன் மூலம் அரசு ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கொலை வழக்குப் பதிவு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் மது விற்பனை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை - ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்