நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு..! - Erode District
Published : Nov 11, 2023, 11:59 AM IST
ஈரோடு:பெருந்துறையில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கம்புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்குச் சொந்தமான 5 வீடுகளில் குடியிருப்பு வாசிகள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்து சோதனை செய்ய விவசாயி பொன்னுசாமி தன் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவைச் சோதனை செய்துள்ளார். அப்போது நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு வீட்டை நோட்டமிடுவதும், வீட்டின் முன் பகுதியில் ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து தேடி பார்த்த நிலையில் எதுவும் கிடைக்காததால் மர்ம நபர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொன்னுசாமி கொடுத்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீடுகளில் பட்டாக்கத்தியுடன் நோட்டமிடும் மர்ம நபர்களால் அச்சமடைந்திருப்பதாகவும், இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.