டீக் கடை போண்டாவில் இறந்து கிடந்த பல்லி! சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ! - தருமபுரி செய்திகள்
Published : Nov 22, 2023, 10:15 PM IST
தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள டீ கடையில் விற்பனை செய்த வடை, போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது போண்டா ஒன்றில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது.
இதைக் கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சியடைந்து, சாப்பிட்ட போண்டாவை துப்பிவிட்டு, அதில் பல்லி இருந்ததை கடைக்காரரிடம் காட்டியுள்ளார். பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வாங்கி சாப்பிட்ட போண்டாவில் பல்லி இருந்தது குறித்து ஒருவர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் கடையின் உரிமையாளர், கடையின் உட்புறம், போண்டா போட்ட மாஸ்டர் ஆகியோரையும் அந்த நபர் காட்டியுள்ளார். டீக் கடை போண்டாவில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.