பொட்டலம் பொட்டலமாக கள்ளச்சாராயம் கடத்தல் - சேலம் போலீஸில் சிக்கியது எப்படி?
Published : Aug 24, 2023, 10:52 PM IST
சேலம்:சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, கரிய கோயில், பாலமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்டு, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து கொல்லிமலைக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, நாள்தோறும் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் கருமந்துறை காவல்துறையினர் நாகலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் ஒருவர் சென்றுள்ளார். சந்தேகத்தின் பெயரில் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் பிடித்து விசாரணை செய்ததில் அவர் கருமந்துறை பகுதியை சேர்ந்த மாது என்பதும் அவர் பல மாதங்களாக கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.