இளையராஜா தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் - நடிகர் விமல் - elephant whisperes
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் விமல் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் ஆவண குறும்படத்திற்கு உயரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த ஆஸ்கர் விருது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஆர்ஆர்ஆர் பட பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், வசூல் மற்றும் விருதுகளில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுவதாக உணரவில்லை என்றும் கூறினார். கலைத்துறையில் மொழி பாகுபாடு இல்லை எனவும்; எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் நன்றாக இருந்தால் வெற்றி அடைகிறது எனவும் கூறினார்.
மேலும், இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருதுக்கு புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இசைஞானி இளையராஜா ஒரு லெஜண்ட் என்றும், ஆஸ்கர் விருது வாங்கித் தான் அவர் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும்; அவர் தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் என மனதாரப்பாராட்டினார்.
மேலும், விலங்கு வெப் சீரியல் வெற்றி பெற்றதால் முருகனை தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்த அவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருவதாகவும் கூறினார். தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும்; தரமான சினிமாக்களை கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தொகுதியில் தன் மனைவிக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவம் பயில்வதால் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கேட்க விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:'The Elephant Whisperers' ஒலி பதிவு.. சவுண்ட் மிக்ஸிங் வல்லுநர் லாரன்ஸ் கூறிய சுவாரஸ்ய நிகழ்வு!