Karumegangal Kalaiginrana movie press meet: தங்கர் பச்சான் இயக்கத்தில் முதலில் நடிக்க தயங்கினேன் - நடிகை அதிதி - tamil cinema news
Published : Aug 24, 2023, 3:38 PM IST
சென்னை:தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதம் மேனன், தங்கர் பச்சான், ஆர்வி உதயகுமார் நடிகர்கள் அதிதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகை அதிதி பேசியது “பாரதிராஜா சாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அருவி படத்தில் நிறைய புதுமுகங்களுடன் நடித்தேன். இந்த படத்தில் ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். படப்பிடிப்பின் போது முக்கியமாக பாரதிராஜா சாரிடம் அதிகம் கற்று கொண்டேன்.
மேலும் படத்தை பார்க்கும் போது பாரதிராஜா சார் நடித்த காட்சிகளில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வித்தியாசங்கள் இருந்தது. தங்கர்பச்சான் சார் முதலில் என்னிடம் கதை சொன்ன போது எனக்கு அவருடைய அழகி படம் தான் ஞாபகம் வந்தது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என தயங்கினேன் பின்னர் தங்கர் பச்சான் விளக்கமளித்த பிறகு நடித்தேன். அனைவருக்கும் நன்றி” என பேசினார்