ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் தேர் திருவிழா கோலாகலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் தேர் திருவிழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் (பிப்ரவரி) கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் மரகதாம்பிகை அம்மன், சந்திர சூடேஸ்வரர் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு தலா ஒரு தேர் என மூன்று தேர்கள் இழுக்கப்பட்டன. இதனை அம்மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஓசூர் சாராட்சியர் சரண்யா, ஓசூர் மாநகர ஆணையாளர் சிநேகா, மேயர் சத்யா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து ‘அரோகரா’ என கோஷம் எழுப்பியவாறு ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர். தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது. மேலும் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை தேர்களின் மீது எரிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரம் முழுவதும் அன்னதானம், மோர், பழ ரசங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அதேநேரம் ஓசூர் தேர் திருவிழாவிற்காக 4 வட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.