விநாயகர் சிலை வைக்க மாநகராட்சிக்கு விநாயகரே நேரில் மனு! - Municipal Corporation office
திருநெல்வேலி மாநகர சந்திப்பில் அமைந்துள்ளது, பெரியார் பேருந்து நிலையம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, தற்போது புதிய பேருந்து நிலையமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த அருள்மிகு பாக்கிய விநாயகர் மற்றும் அருள்மிகு கல்யாண விநாயகர் கோயில் ஆகிய இரண்டு விநாயகர் கோயிலும் பேருந்து நிலையம் அகற்றும்போது அகற்றப்பட்டுள்ளது.
அப்போது அதிகாரிகள் புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்தவுடன், அதே இடத்தில் விநாயகர் கோயில்கள் கட்டப்படும் என உறுதி அளித்துள்ளனர். ஆனால், தற்போது பேருந்து நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இருப்பினும் தற்போது வரை அந்த இரண்டு விநாயகர் சிலைகளும் இருந்த இடத்தில் வைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்து முன்னணியினர் வித்தியாசமான முறையில் பேருந்து நிலையத்தில் மீண்டும் விநாயகர் சிலைகளை வைக்க கோரி நேற்று (ஜூலை 4) நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் விநாயகர் வேடமணிந்து மனு கொடுத்துள்ளனர். அப்போது உடனடியாக விநாயகர் சிலை அங்கு வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.