குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைக்கூட்டம்! - வனத்துறையினர் எச்சரிக்கை
Published : Dec 15, 2023, 9:52 AM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் யானைக் கூட்டம் உலா வருவதனால், வாகன ஓட்டிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் பயணிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் என்பதனால், காட்டு யானைகளின் நடமாட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகரித்து இருக்கும். அதிலும் கடந்த ஒருமாத காலமாக பருவ மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் புதுக்காடு, கோழிக்கரை, குரும்பாடி மரப்பாலம், காட்டேரி பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கூட்டங்கள், அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரத்தொடங்கி உள்ளன.
அவ்வப்போது மூன்று குட்டிகளுடன் உலா வரும் யானைக் கூட்டத்தால், வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். சாலையில் உலா வரும் யானைக் கூட்டத்தை எவ்வித தொந்தரவும் செய்யாமல், மலைப்பாதையில் பயணிக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகளை வீடியோவாகவோ அல்லது படமோகவோ எடுக்கக் கூடாது என்றும், வாகனங்களில் அதிக ஒலியும் எழுப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள், அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.