வாகன ஓட்டிகள் அவதி! விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை
சென்னை:சென்னை புறநகர்ப் பகுதியில் விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை, முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகியப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாம்பரம் பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி சுரங்கப் பாலங்களில் அதிகாலை 2:30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சுரங்கப் பாலங்களில் போக்குவரத்துப் பாதிப்பு இல்லாமல் இருக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் லேசான மலைக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி விடும். இந்நிலையில் தொடர்ந்து இரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தேங்க விடாமல் அதை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஆகியப் பகுதியில் உள்ள எந்த ஒரு ரயில்வே சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்காமல் வாகன ஓட்டிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. கடுமையான அனல் காற்று இருந்த ஒரு சூழல் நீங்கி தொடர் மழை சில்லென்ற காற்று வீசும் சூழலாக உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.