வன ஊழியரை துரத்திய காட்டு யானை.. தலைக்குப்புற விழுந்து உயிர் தப்பிய வன ஊழியர்! - இன்றைய செய்திகள்
Published : Sep 30, 2023, 2:20 PM IST
நீலகிரி: எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது பிரதான சாலைகளில் உலா வருவது தொடர் கதையாக இருக்கிறது. இந்நிலையில் பந்தலூர் சுற்றுப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் யானையை விரட்ட வனத்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் யானை கூட்டத்தை விரட்ட வனத் துறையினர் நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சாலைகளுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (செப். 30) எலியாஸ் கடை மலை பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பொழுது ஒரு வன ஊழியரை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தியது.
இதில் மலை மீது இருந்து வன ஊழியர் தலை குப்புற விழுந்து உருண்டு உயிர் தப்பித்தார். இந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர், குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.