2 ஆயிரம் கிலோ திராட்சை பழங்களால் விநாயகருக்கு திருவிழா! - திராட்சை சீசன்
புனே: புனேயில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் சங்கஷ்டி சதுர்த்தியை முன்னிட்டு தக்துஷேத் கணபதி கோவிலில் 2 ஆயிரம் கிலோ திராட்சை பழங்களை கொண்டு திராட்சை திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயிலின் சபாமண்டபம் கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சைகளால் அலங்கரிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுனில் ராஸ், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விலாஸ் ஷிண்டே, சயாத்ரி விவசாயிகள் உற்பத்தியாளர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். இந்த இரண்டாயிரம் கிலோ திராட்சை திருவிழா முடிந்ததும், பக்தர்கள், அனாதை இல்லங்கள், விருத்தாசிரமங்கள் மற்றும் சாசூன் மருத்துவமனைகளுக்கு திராட்சை பழங்கள் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திராட்சை விளையும் சீசனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து இந்த தக்துஷேத் கணபதி கோயிலில் திராட்சை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தக்துஷேத் கணபதி கோவிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபத்தில் முழுவதும் காட்சியளிக்கும் கவர்ச்சியான ஆரங்களைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
தக்துஷேத் ஹல்வாய் கணபதி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுனில் ரசானே, "பருவநிலை மாற்றம் மற்றும் சந்தை விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக திராட்சை விவசாயம் தற்போது நெருக்கடியான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. ஆனால் விவசாயிகள் நெருக்கடியில் இருந்து மீள்வதில் உறுதியாக உள்ளனர். இந்த நிலையிலும் விவசாயிகள் ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி அறக்கட்டளை சார்பில் விக்னஹர்த்ய விநாயகருக்கு பிரசாதம் வழங்கினர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லி 'ஹோலி' விழாவில் ஜப்பான் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. குஷ்பூ கண்டனம்!