தாத்தாவின் வேண்டுதலை நிறைவேற்ற 1017 படிக்கட்டுகளில் உருண்டு சுவாமி தரிசனம் செய்த பேரன்.. - 1017 படிக்கட்டுகளில் உருண்டு பேரன் சுவாமி தரிசனம்
Published : Dec 12, 2023, 4:14 PM IST
கரூர்: குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுரும்பார் குழலி அம்மன் உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவ தளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள், குலதெய்வ வழிபாட்டுக் காரர்கள் ஆகியோர் தேங்காய், பழம் உடைத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருவர். இந்த ஆண்டுக்கான 4வது சோமவார விழா நேற்று (டிச.11) கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் மலை உச்சியில் உள்ள சுவாமியைத் தரிசனம் செய்ய 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி வழிபட்டார். முன்னதாக, இந்த இளைஞரின் தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி, பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும், 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார்.
அவரது மறைவிற்குப் பின், தாத்தாவின் வேண்டுதலைத் தொடர்ந்து 13வது முறையாக அய்யர் மலையில் உள்ள 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.