உலக "கிக் பாக்ஸிங்": தங்கம், வெள்ளி என 4 பதக்கங்களை வென்று திரும்பிய அரசுப்பள்ளி மாணவர்கள்! - medals
சென்னை: தாய்லாந்து நாட்டின் உலக கிக் பாக்ஸிங் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்டப் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 3 தங்கப் பதக்கங்களும், 1 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனைப் படைத்தனர்.
உலக கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்கம் வென்ற மாணவர் அனிஷ்வின் கூறியதாவது, "தாய்லாந்து நாட்டிற்குச் சென்று உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் பெல்டும் வென்றுள்ளேன். முதல் சுற்று மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும், வெற்றி பெற்றுவிட்டேன். அடுத்து ஆசிய விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு" என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய துவாரிதா கூறியது, "ஆறு ஆண்டுகளாக கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட, மாநில விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டோம். முதல் முறையாக உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த இலக்காக ஆசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வோம். இதில் பங்கேற்க அரசு உதவி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்" என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.