வாங்க சாப்பிடலாம்.. உணவு திருவிழாவில் பல வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாணவிகள்! - உணவு திருவிழா
Published : Sep 7, 2023, 7:04 PM IST
தூத்துக்குடி:கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 1 முதல் 7 வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சிறுதானிய ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வந்தது.
இப்பள்ளியில் நடந்த உணவு திருவிழாவில் பள்ளி சத்துணவில், மனையியல் பிரிவு மாணவிகள் குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, பனிவரகு, கொள்ளு, எள்ளு, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களிலிருந்து பொங்கல், வடை, உப்புமா, பணியாரம், சாதம் வகைகள், பாயாசம், கொழுக்கட்டை, இட்லி, தோசை, பக்கோடா, புட்டு, முளைக் கட்டிய தானியங்கள், அல்வா, லட்டு, அதிரசம், பிரியாணி உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளைச் செய்து அசத்தினர்.
இந்நிகழ்ச்சிக்குக் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலலிதா தலைமை வகித்தார். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுதானிய உணவு வகைகளைப் பார்வையிட்டுச் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின், உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் உள்பட மனையியல், சத்துணவில் பிரிவு மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.