"நீட் தேர்வில் மாணவர்களை வைத்து மாநில அரசு ஆதாயம் தேட பார்க்கிறது" - தமிழிசை குற்றச்சாட்டு! - நீட் போராட்டம் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்
திருவள்ளூர்:திருத்தணி அருகே நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆன்மீகத்துடன் கூடிய தமிழ்நாடு. தமிழை வளர்த்தது ஆன்மீகம் தான் என்று நாம் உறக்க சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் மாணவர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு தான் பதவி ஏற்போம் என்று சொன்னார்கள். இப்போது கையெழுத்து போட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா அல்லது கையெழுத்து போடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்களா. மாணவர்கள் தன்னம்பிக்கையோடு படிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏராளமானோரின் மருத்துவர் கனவு நிறைவேறி வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களின் நம்பிக்கை குலைக்கும் அளவிற்கு ஆளும் கட்சி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுகிறது. நீட் தேர்வில் மாணவர்களை வைத்து மாநில அரசு ஆதாயம் தேட பார்க்கிறது" என்று கூறினார்.