“இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?” பெண்ணை தரக்குறைவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர்! - ஓட்டுநர் மீது நடவடிக்கை
Published : Jan 6, 2024, 1:20 PM IST
நீலகிரி: கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி பகுதிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பன்னீர் என்ற ஓட்டுநர் இயக்கிய நிலையில், அய்யன் கொல்லிக்கு முன்னதாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிரியா என்ற பெண் தனது கைக்குழந்தையுடன் பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது பேருந்து வருவதைக் கண்ட சிரியா நிறுத்த கூறி கைகாட்டி உள்ளார். ஆனால் ஓட்டுநர் பன்னீர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து, சிரியா வேறு தனியார் வாகனத்தின் மூலம் அரசுப் பேருந்தை பின்தொடர்ந்து சென்று, அய்யன்கொல்லி பேருந்து நிலையத்தில், பேருந்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு ஓட்டுநர் பன்னீர், “இது உங்க அப்பன் வீட்டு வண்டியா?” என்று கோபமாக பேசிவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். அதனை வீடியோ பதிவு செய்த நபரையும், ஒருமையில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். பேருந்து பயணிகளிடம் தவறாக பேசும் ஓட்டுநர்களை அரசுப் பணியில் சேர்த்திருப்பது வருத்தப்படக்கூடிய விஷயமாக உள்ளது எனவும், நிர்வாக ரீதியாக ஓட்டுநர் பன்னீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.