மழை வேண்டி கிராம தேவதைக்கு 108 தண்ணீர் குடங்களுடன் பெண்கள் அபிஷேகம் - special preaches
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த நரியம்பாடி கிராமத்தில் கிராம தேவதை மண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 108 பெண்கள் தண்ணீர் குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
வரசக்தி விநாயகர் கோயிலிருந்து 108 பெண் பக்தர்கள் தண்ணீர் குடம் சுமந்து பம்பை உடுக்கையுடன் முக்கிய வீதிகள் மற்றும் ஏரிக்கரை வழியாக கிராமதேவதை மண்டியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் போன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட 108 குடம் தண்ணீரை அம்மன் மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்தனர்.
பின்னர் அம்மன் சிலையை வண்ணப் பூக்களால் அலங்கரித்து, பொங்கல் படையலிட்டு மகாதீபாராதனை காட்டி வழிபட்டனர். அப்போது பக்தர்கள் மீது அருள் இரங்கி அங்கிருந்த பக்தர்கள் பலர் ஆடியதால் சற்று நேரத்திற்கு பக்திப்பரவசமாக உணரப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்