அரசுப் பள்ளியில் காந்தி சிலை உடைப்பு.. மர்ம நபருக்கு வலைவீச்சு.. செங்கத்தில் நடந்தது என்ன?
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவ சிலை நள்ளிரவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1963 - 64 ஆம் ஆண்டு பயின்ற 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உருவ சிலை அமைத்துள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த சிலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை நாள் என்பதாலும், பள்ளியில் போதுமான பாதுகாவலர்கள் இல்லாததாலும் இரவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த தகவல் அறிந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து சிலைகளை மூடிவிட்டு செங்கம் போலீசாரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோத செயலுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.