"விரைவில் சட்டமன்ற தேர்தல்.. எடப்பாடியார் முதலமைச்சர்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி! - தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
Published : Sep 9, 2023, 8:08 AM IST
தூத்துக்குடி:பூத்கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி, விஇ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (செப். 8) நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "எப்போது தேர்தல் நடந்தாலும் அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார் தான். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அண்ணா திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் வெகு விரைவில் வர உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் தான் அடுத்த முதலமைச்சராக வருவார். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை வெல்வதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.