தென்கரை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்! - Purattasi Month
Published : Sep 24, 2023, 10:30 AM IST
தேனி:தமிழக முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் நேற்று (செப். 23) பெரியகுளம் தென்கரை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் விரதமிருந்து வணங்குவார்கள். அதிலும் இந்த மாதத்தில் பெருமாளுக்கு கூடுதல் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
இதனால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தென்கரை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நேற்று (செப். 23) பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூலவருக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. மேலும் கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பங்கேற்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா.... கோவிந்தா... என கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (செப். 23) இரவு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.