பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குரங்கு கூட்டம்.. கூண்டு வைத்து பிடித்த வனத்துறை! - monkeys issue in Kodaikanal
Published : Oct 31, 2023, 11:44 AM IST
திண்டுக்கல்:கொடைக்கானலில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த குரங்கு கூட்டத்தை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வனவிலங்குகளான காட்டெருமைகள், மான்கள், பன்றி, சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி அப்பகுதியில் வலம் வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கொடைக்கானல் நகர் பகுதிகளில் தற்போது அதிக அளவில் குரங்குகளின் நடமாட்டம் உள்ளதாகவும், தொடர்ந்து அங்குள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டும் எழுந்து வந்தது.
இதனையடுத்து, கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மேலும், பிடிபட்ட குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து, பொது மக்களுக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டெருமை கூட்டத்தையும் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது.