பாசி பிடித்த கேனில் இருந்த பானி பூரி ரசம்..! ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
Published : Dec 13, 2023, 4:55 PM IST
தேனி:மக்களின் விருப்ப சாட் ஐட்டங்களில் பானி பூரி முதல் இடத்தில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்த பானி பூரியை, மக்கள் தங்கள் விருப்ப உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், அனைவரின் விருப்ப உணவாக மாறிப்போன இந்த பானி பூரியை, சில கடைகள் தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்கின்றன.
அப்படி தேனியில் சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத் துறையினருக்குப் புகார்கள் வந்துள்ளன. அந்த புகாரினை அடுத்து, அங்கு பானி பூரி விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டர்.
இந்த ஆய்வில், பானி பூரிக்கு பயன்படுத்தும் பூரிகள் பிளாஸ்டிக் பைகளிலும், அந்த பூரிகளில் ஊற்றிக் கொடுக்கப்படும் ரசத்தை, பாசிபிடித்த நிலையில் இருந்த சுகாதாரமற்ற கேன்களிலும் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தரமற்ற உருளைக் கிழங்கு மற்றும் சுகாதாரமற்ற கேன்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அதனைச் சாக்கடையில் கொட்டி அப்புறப்படுத்தினர். மேலும், இதேபோல் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முறையில் பானிபூரி விற்பனை செய்த பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் எச்சரிக்கையும் விடுத்தனர்.