குற்றாலம் மெயின் அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு.. 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
Published : Nov 26, 2023, 4:14 PM IST
தென்காசி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று (நவ. 25) குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவ. 26) மெயின் அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது. பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சீரானதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஐயப்ப சீசன் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மெயின் அருவியில் குளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.