மீன்பிடி திருவிழா: நத்தம் அருகே கேசரி கண்மாயில் ஓடி ஓடி மீன் பிடித்த கிராம மக்கள்! - மீன்பிடி திருவிழா கொண்டாட்டம்
திண்டுக்கல்: நத்தம் அருகே பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழை வளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதற்காக ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். மேலும் கண்மாயில் நிறைந்த அந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். பின கோடையில் இக்கண்மாயில் நீர் வற்றும் போது மீன்களை பிடிப்பது வழக்கம்.
இதில் சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டமின்றி வெளிமாவட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரையும் மீன்பிடி விழாவில் பங்கேற்க அழைக்கின்றனர். இன்று காலை முதல் கிராமத்தினர் கண்மாய் பகுதியில் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்கள் ரூபாய் 200 செலுத்தி கூத்தா எனப்படும் வகையால் துணைக்கு ஒரு நபருடன் கண்மயில் இறங்கி மீன் பிடித்தனர். அதில், விரால், ஜிலேபி கெண்டை என பல மீன்கள் சிக்கின.
கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். அதற்கு பின்னர் கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை என்று பல விதங்களில் நீரை அலசி மீன்களை உற்சாகமாக பிடித்தனர். மீன்கள் சிக்காவிட்டாலும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
மேலும் தங்களுக்கு கிடைத்த மீனை பலரும் பகிர்ந்து கொண்டதால், பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.