முதலை கடித்ததில் மீனவர் படுகாயம்..மருத்துவமனையில் அனுமதி! - Thanjavur
தஞ்சாவூர்:கும்பகோணம், அணைக்கரை அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் இன்று கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்று உள்ளார். மீன் பிடிப்பதற்காக விசிறி வலையையும் எடுத்துக் கொண்டு சென்று உள்ளார். அவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவரின் இரு கால்களையும் முதலை ஒன்று கவ்விப் பிடித்து கடித்து உள்ளது.
முதலை பலமாக கடித்ததால் ரவி இரு கால்களிலும் பலத்த காயமுற்றார். பின்னர், அவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்து விரைந்து வந்தவர்கள், முதலையிடம் இருந்து அவரை மீட்டு உள்ளனர். பின், உடனடியாக அங்கிருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். தற்போது காயமுற்ற ரவி உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று நலமாக உள்ளார்.
முதலையின் பிடியிலிருந்து ரவியை மீட்டவரான அணைக்கரையைச் சேர்ந்த அபினேஷ், இதற்கு முன்னாலும் 8 பேரை முதலை கடித்து உள்ளதாகவும், மேலும் விவசாயம் ஏதும் இன்றி தாங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.